நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு செய்திகளும் சம்பவங்களும் 20ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஈழத்து இந்துக் கோயில்கள் – தொல்பொருட்களும் இலக்கிய மரபுகளும்

20ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஈழத்து இந்துக் கோயில்கள் – தொல்பொருட்களும் இலக்கிய மரபுகளும்

Research Conferenceஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இவ் வருடத்திற்கான ஆய்வு மாநாடு “இருபதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஈழத்து இந்துக் கோயில்கள் – தொல்பொருட்களும் இலக்கிய மரபுகளும்” எனுந் தொனிப்பொருளில் எதிர் வரும் ஒக்டோபர் மாதம், முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்து சமயத்தைப் பொறுத்தவரையிற் கோயில்கள் பிரதான இடம் வகிப்பன. இந்து கலாசாரம் கோயிலை மையப்படுத்திய கலாசாரமாகவே விளங்குகின்றது. அழிந்தனவும் அழியாதனவுமாய் விளங்குங் கோயில்கள் பற்றித் தொல்பொருட்கள், இலக்கிய மரபுகளினடியாகச் செவ்வையான முறையில் ஆராய வேண்டியதும் அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ஒழுங்காகப் பதிவுசெய்ய வேண்டியதும் நமது பிரதான கடமைகள் என்பதைச் சமகால இலங்கையின் சமூக அரசியல் நிலைமைகள் எமக்குத் துலாம்பரமாக உணர்த்தி நிற்கின்றன. ஈழத்தில் இந்து சமயத்தின் தொன்மையையும் அங்கு அது பெற்றிருந்த செல்வாக்கையும் உணர்த்துவனவாக அமைகின்ற இந்துக் கோயில்களை அவற்றின் வரலாற்றுப் பெருமையோடு சான்றுகளின் ஊடாக மீட்டெடுப்பதே இந்த ஆய்வு மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.

பூர்வீகக் காலம் முதலாக இலங்கையில் இந்து சமயம் நிலவிவருகிறது. அது இந்துக்களது நம்பிக்கையில் மாத்திரமன்றிச் சிங்கள பௌத்த மக்களது நம்பிக்கையிலும் நிலைபெற்று வந்துள்ளது; இன்றும் நிலைகொண்டுள்ளது. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், கதிர்காமம் முதலான தலங்கள் கடல் கடந்து பரவிய பெருமை உடையனவாய்த் திகழ்ந்தன. காலத்துக்குக் காலம் அரியணையேறிய சிங்கள, தமிழ் அரசர்கள் புதியனவாகப் பல ஆலயங்களையும் சதுர்வேதி மங்கலம் முதலானவற்றையும் நிறுவி அவற்றின் பரிபாலனத்தின் பொருட்டு மானியங்களையும் வழங்கினார்கள். அநுராதபுரம், பொலனறுவை, யாழ்ப்பாணம், கோட்டை முதலான இராசதானிகளில் அவ்வாறு நிறுவப்பட்ட கோயில்கள் பல கிலமடைந்துவிட்டன. தொல்பொருட் சின்னங்களூடாகவே அவற்றின் பெருமையையும் வரலாற்றையும் மீட்டெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஈழத்து இந்துக்கோயில்களுட் பல தமக்கான இலக்கியங்களையும் பெற்று விளங்கியுள்ளன. அவ்வாறான இலக்கியச் சிறப்புற்ற கோயில்கள் கூடச் சில இன்று மண்மேடாகவுங் காடுமண்டியுங் காட்சியளிக்கின்றன. அத்தகு கோயில்களை அந்த இலக்கியங்களூடாகவே மீட்டெடுக்கக்கூடியதாயுள்ளது. எனினும் பல கோயில்கள் முற்காலத்திற் போலவே இன்றும் பேரோடும் புகழோடும் வழிபாட்டு நடைமுறைகளோடும் நிலைபெற்றுள்ளன.

இத்தகு நிலையில், “இருபதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஈழத்து இந்துக் கோயில்கள் – தொல்பொருட்களும் இலக்கிய மரபுகளும்” என்ற ஆய்வுப்பொருண்மையில், தொல்பொருட் சின்னங்கள், சாசனங்கள், தமிழ், சிங்கள, சமஸ்கிருத, பாளி இலக்கிய மரபுகள் மற்றும் வெளிநாட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புக்கள் போன்றவற்றை ஆய்வு மூலாதாரங்களாகக் கொண்டு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் திகதிக்கு முன்பதாகத் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளைப் “பணிப்பாளர், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இல.248, 1/1, காலி வீதி, கொழும்பு - 04” என்னும் முகவரிக்குப் பதிவுத் தபாலிலோ அல்லது இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்கலாம்.

கட்டுரை சமர்ப்பிக்கும் ஆய்வாளர்கள் தமிழில் பன்னிரண்டு புள்ளியளவில் A-4 அளவு தாளில் எட்டுப் பக்கங்களுக்கு மேற்படாமல் மேற்கோள், குறிப்புப்பட்டியல், உசாத்துணை நூற்பட்டியல் கட்டுரைச் சுருக்கம், கட்டுரையாளர் விபரம், மின்னஞ்சல் முகவரி என்பவற்றுடன் அனுப்பி வைக்கவும்.