நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முகப்பு செய்திகளும் சம்பவங்களும் க.பொ.த. (உ/த) மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி

க.பொ.த. (உ/த) மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி

 

essayஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த ஆய்வு மாநாட்டினை முன்னிட்டு, க.பொ.த. (உ/த) மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

வருடந்தோறும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் ஆய்வரங்கு நிகழ்வு வரிசையில், இவ்வருடம் எதிர் வரும் ஒக்டோபர் மாதம், “இருபதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஈழத்து இந்துக் கோயில்கள் – தொல்பொருட்களும் இலக்கிய மரபுகளும்” எனுந் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஈழத்தில் இந்து சமயத்தின் தொன்மையையும் அது பெற்றிருந்த செல்வாக்கினையும் உணர்த்துவனவாக அமைகின்ற இந்துக் கோயில்களின் வரலாற்றுப் பெருமையைச்  சான்றுகளினூடாக மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட இவ் ஆய்வு மாநாடு தொடர்பான விழிப்புணர்வினை மாணவர்களிடையேயும் ஏற்படுத்தும் நோக்கில்   இக் கட்டுரைப் போட்டியினை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் “தேவாரப்பாடல் பெற்ற ஈழத்துத் திருத்தலங்கள்” அல்லது “சமுதாய நிறுவனங்களாக ஆலய நிறுவனங்கள்” அல்லது “இலங்கையில் முருகவழிபாட்டின் தொன்மை” அல்லது “இலங்கையிற்  சைவர்கள்  வாழ்வின் ஆதாரமாக அமையும் கோயிற் பண்பாடு” என்னும் தலைப்பிற் கட்டுரை அமைக்கவேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்கள், பிரதேச ஆலயமொன்றின் வரலாற்றுச் சிறப்பையுங் கீர்த்தியையும் அவ்வாலயந் தொடர்பான கல்வெட்டுச் சான்றுகளையும் தலப்பிரபந்தங்களையும் அடிப்படையாகக் கொண்ட விடயப் பரப்பிற் கட்டுரை அமைக்க வேண்டும்.(தலைப்பு தெரிவு செய்யப்படும் ஆலயத்தின் பெயராக இருக்கவேண்டும்.)

பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைகள் 1000 சொற்களுக்கு மேற்படாமலும் பல்கலைக்கழக மாணவர்களின் கட்டுரைகள் 2000 சொற்களுக்கு மேற்படாமலும் கையெழுத்துப் பிரதியாகவும் அமைதல் வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் - பாடசாலை அதிபரினாலும்; பல்கலைக்கழக மாணவர்கள் - துறைத்தலைவரினாலும் கட்டுரைகளை உறுதிப்படுத்தி, “பணிப்பாளர், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இல.248, 1/1, காலி வீதி, கொழும்பு - 04” என்னும் முகவரிக்கு 10.08.2019 ஆம் திகதிக்கு முன்னதாகப் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்.